நடுவானில் பறந்து விமானத்தில் பயணிக்கு திடீர் மயக்கம், கவர்னர் டாக்டர் தமிழிசை சிகிச்சை அளித்

நடுவானில் பறந்து விமானத்தில் பயணிக்கு திடீர் மயக்கம், கவர்னர் டாக்டர் தமிழிசை சிகிச்சை அளித்து காப்பாற்றினார்

இன்று அதிகாலை 3.30 மணியளவில் அந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது பயணி ஒருவர் உடல் முழுவதும் வியர்த்து கண்கள் சொருகிய நிலையில் மயங்கி கொண்டிருந்ததை விமான பணிப்பெண் கவனித்து உள்ளார் தெலுங்கானா மாநில கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வாரணாசி சென்றிருந்தார். நேற்று இரவு 1.30 மணிக்கு டெல்லியில் இருந்து ஐதராபாத் வழியாக சென்னை புறப்பட்ட விமானத்தில் ஐதராபாத்துக்கு சென்றார். இன்று அதிகாலை 3.30 மணியளவில் அந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது பயணி ஒருவர் உடல் முழுவதும் வியர்த்து கண்கள் சொருகிய நிலையில் மயங்கி கொண்டிருந்ததை விமான பணிப்பெண் கவனித்து உள்ளார். உடனே அவசர அவசரமாக விமானத்தில் டாக்டர் யாராவது இருக்கிறீர்களா? பயணி ஒருவருக்கு அவசர சிகிச்சை தேவைப்படுகிறது என்று அறிவித்த வண்ணம் இருந்துள்ளார்.

அதை கேட்டதும் டாக்டர் தமிழிசை முன் பகுதியில் இருந்து எழுந்து பின் பகுதிக்கு விரைந்தார். அங்கு தனியாக அமர்ந்து இருந்த அந்த பயணியை பரிசோதித்து முதல் உதவி சிகிச்சை அளித்து சில மருந்துகளையும் கொடுத்து உள்ளார். சிறிது நேரத்தில் அந்த பயணி கண் விழித்து பரவாயில்லை என்பது போல் லேசாக புன்முறுவல் செய்துள்ளார். அவருக்கு தைரியம் சொன்ன தமிழிசை அவர் அருகிலேயே அமர்ந்து ஐதராபாத் வரை பயணம் செய்துள்ளார். விமானம் தரையிறங்கியதும் விமான நிலைய மருத்துவ குழுவினரிடம் அந்த பயணியை ஒப்படைத்துவிட்டு கவர்னர் மாளிகை புறப்பட்டு சென்றார்.

உடல்நிலை பாதித்த அந்த பயணி ஓய்வு பெற்ற உயர் போலீஸ் அதிகாரி என்பது தெரிய வந்தது. தக்க நேரத்தில் கவனித்து உஷார்படுத்திய விமான பணிப்பெண்ணை டாக்டர் தமிழிசை பாராட்டினார். அதே விமானத்தில் பயணித்த ராணுவ அதிகாரி ஒருவர் இதை செல்போனில் படம் பிடித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றி இருக்கிறார். இதுபற்றி டாக்டர் தமிழிசையிடம் கேட்டபோது, "தக்க நேரத்தில் அந்த பணிப்பெண் கவனித்துள்ளார். அவருக்கு ரத்த அழுத்தம் மிகவும் குறைந்து போயிருந்தது. தலையும் குழைந்து விழும் நிலையில் இருந்தார். கவனிக்காமல் இருந்திருந்தால் மயக்க நிலையை அடைந்து இருப்பார்" என்றார்.

 

Related News