100க்கும் மேற்பட்டோர் மொட்டை அடிக்கப்பட்ட நிலையில் சித்ரவதை, காப்பக நிர்வாகி உள்பட 6 பேர் கைது

100க்கும் மேற்பட்டோர் மொட்டை அடிக்கப்பட்ட நிலையில் சித்ரவதை, காப்பக நிர்வாகி உள்பட 6 பேர் கைது
 

சத்தம் கேட்டு ஆதிவாசி மக்கள் அந்த ஆதரவற்றோர் காப்பகத்திற்கு சென்று பார்த்தபோது 100க்கும் மேற்பட்டோர் மொட்டை அடிக்கப்பட்ட நிலையில் உள்ளே அடைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். கோவை அடுத்த தொண்டாமுத்தூர் அருகே அட்டுக்கல் மலை அடிவாரத்தில் தனியாருக்கு சொந்தமான ஆதவரற்றோர் காப்பகம் உள்ளது. இந்த நிலையில் கடந்த 2 தினங்களாக இந்த காப்பகத்தில், இருந்து இரவு நேரங்களில் காப்பாற்றுங்கள். காப்பாற்றுங்கள் என சத்தம் வந்தது. சத்தம் கேட்டு ஆதிவாசி மக்கள் அந்த ஆதரவற்றோர் காப்பகத்திற்கு சென்று பார்த்தபோது 100க்கும் மேற்பட்டோர் மொட்டை அடிக்கப்பட்ட நிலையில் உள்ளே அடைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இந்த தகவலானது அந்த பகுதி முழுவதும் வேகமாக பரவியது. மேலும் தொண்டாமுத்தூர் போலீசார் மற்றும் பேரூர் தாசில்தாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து பேரூர் தாசில்தார் இந்துமதி, போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாரயணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆதரவற்ற மையத்தை பார்வையிட்டனர். மேலும் அங்கிருந்த விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை சேர்ந்த அன்பின் ஜோதி ஆசிரமத்தை சேர்ந்த ஜூபின் பேபி மற்றும் அவருடன் இருந்த 14 ஆசிரம நிர்வாகிகளிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது ஜூபின் பேபி கடந்த 17 வருடமாக ஆதரவற்ற முதியவர்களை மீட்டு ஆசிரமத்தில் விடும் பணி செய்து வருவதாக தெரிவித்தார். மேலும் கோவை காந்திபுரம், அரசு ஆஸ்பத்திரி, கோவில்கள் பிச்சை எடுப்பவர்கள், ஆதரவற்றவர்களை இங்கு கொண்டு வந்து வைத்து பராமரித்து வருவதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து அங்கிருந்த ஆதரவற்றவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது, அவர்கள், தங்களை வலுக்கட்டாயமாக வாகனங்களில் இங்கு ஏற்றி வந்து, தங்க வைத்தனர். எங்களுக்கு மொட்டை அடித்தனர். பின்னர் குச்சி, பிளாஸ்டிக் பைப்பால் தாக்கி தகாத வார்த்தைகளால் திட்டுவதாகவும் போலீசாரிடம் தெரிவித்தனர். இதற்கிடையே இந்த தகவல் அறிந்து சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் விடுதி அருகே திரண்டனர். அவர்கள் ஆதரவற்றவர்களை கடத்தி வந்து சித்ரவதை செய்தவர்களை கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர். போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து செல்லுமாறு கூறினர். ஆனால் கலைந்து செல்ல மறுத்து அங்கிருந்து வாகனங்கள் செல்ல முடியாதபடி சாலைகளில் கற்களை வைத்து மறித்தனர். இதனால் போலீசாருக்கும், பொதுமக்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் பொதுமக்கள் அங்கு நின்றிருந்த ஆதரவற்றவர்களை ஏற்றி வந்த வேனை உடைத்து சேதப்படுத்தியதுடன், தலைகுப்புற கவிழ்த்தனர். இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதனை தொடர்ந்து மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து பேரூர் தாசில்தார் இந்துமதி தொண்டாமுத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், இந்த மையத்தை ஜூபின் பேபி முன் அனுமதியின்றி நடத்தி வருவதும், கோவை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆதரவற்றவர்களை கடத்தி வந்து அறைக்கு அடைத்து, மொட்டை அடித்து சித்ரவதைபடுத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சமூக சேவகர்களான விழுப்புரத்தை சேர்ந்த ஜூபின் பேபி(44), கோவை பி.என்.புதூரை சேர்ந்த செந்தில்குமார்(44), சென்னையை சேர்ந்த செல்வின்(49), அருண்(36), தருமபுரியை சேர்ந்த பாலச்சந்திரன்(46), சத்தியமங்கலத்தை சேர்ந்த ஜார்ஜ் ஆகிய 6 பேர் மீது கொலை மிரட்டல், தகாத வார்த்தைகளால் பேசுதல், சிறைவைத்தல், காயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Related News