மீன்பிடி வலையில் சிக்கிய 30 கிலோ கஞ்சா பொட்டலங்களை பதுக்கி விற்க முயன்ற மீனவர் கைது



ராமேசுவரம் பெரிய பள்ளிவாசல் அருகே மணலில் கஞ்சா பொட்டலங்களை மறைத்து வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இலங்கைக்கு கடல் வழியாக கஞ்சா கடத்தப்படுவதாக உளவுத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இது தொடர்பாக ராமேசுவரம் பகுதியில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் கடலில் வீசப்பட்ட கஞ்சா பொட்டலங்களை மீனவர் ஒருவர் மீட்டு பதுக்கி வைத்து விற்பனை செய்ய முயற்சிப்பதாக தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், ராமேசுவரம் பெரிய பள்ளிவாசல் அருகே மணலில் கஞ்சா பொட்டலங்களை மறைத்து வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தியதில், பெரிய பள்ளிவாசல் தெருப்பகுதியைச் சேர்ந்த ஜெனதன் (வயது 40) என்ற மீனவர் கஞ்சா பார்சல்களை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்ததுடன், கஞ்சாவை மறைத்து வைத்த ஜெனதனை கைது செய்தனர்.

பின்னர் அவரை ராமேசுவரம் கோவில் அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். இதில் அவர் தனது மீன்பிடி வலையில் சிக்கிய 30 கிலோ கஞ்சாவை மீட்டு வந்து பதுக்கி வைத்திருப்பதாக தெரிவித்தார். அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ. 7 லட்சம் ஆகும். இதுதொடர்பாக ஜெனதன் கூறும்போது, கடந்த 16-ந்தேதி விசைப்படகில் சென்று ராமேசுவரம் துறைமுக பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தேன். அப்போது கடத்தல்காரர்கள் போலீசுக்கு பயந்து கடலில் வீசிச்சென்ற கஞ்சா பொட்டலங்கள் எனது வலையில் சிக்கின. அதனை எடுத்துவந்து ராமேசுவரம் பெரிய பள்ளிவாசல் பகுதியை சேர்ந்த குணசேகரன் என்பவரிடம் விற்பனைக்கு கொடுத்தேன் என்று தெரிவித்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Related News