கீழ்சேரியில் அரசு நிதி உதவி பெறும்

கீழ்சேரியில் அரசு நிதி உதவி பெறும் "சேக்ரட் ஹார்ட் பெண்கள் பள்ளி விடுதியில் பிளஸ்-2 மாணவி திடீர் தற்கொலை



திருவள்ளூரை அடுத்த மப்பேடு அருகே உள்ள கீழ்சேரியில் அரசு நிதி உதவி பெறும் "சேக்ரட் ஹார்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளி" உள்ளது. இங்கு திருத்தணியை அடுத்த தக்களூர் கிராமத்தைச் சேர்ந்த பூசனம் என்பவரது மகள் சரளா (வயது17) பிளஸ்-2 படித்து வந்தார். அவர் பள்ளியின் பின்புறம் உள்ள விடுதியில் தங்கி பள்ளிக்கு சென்று வந்தார். இன்று காலை வழக்கம்போல் மாணவி சரளா சீருடை அணிந்து பள்ளிக்கு புறப்பட்டார். பின்னர் அவர் தோழிகளுடன் உணவு சாப்பிடுவதற்காக விடுதியில் உள்ள அறைக்கு சென்றார். அப்போது மாணவி திடீரென விடுதி அறைக்கு செல்வதாக மற்ற தோழிகளுடன் கூறி விட்டு திரும்பிச் சென்றார்.

நீண்ட நேரம் ஆகியும் மாணவி சரளா திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த தோழிகள் விடுதி அறைக்கு சென்று பார்த்தபோது தூக்கில் தொங்கிய நிலையில் சரளா பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து விடுதி பொறுப்பாளர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன், சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீ சார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அவர்கள் மாணவி சரளாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மாணவி சரளாவின் தற்கொலைக்கான காரணம் என்ன? என்று தெரியவில்லை. இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மாணவி தற்கொலை குறித்து அறிந்ததும் அவரது பெற்றோர் பூசனம், முருகம்மாள் மறறும் உறவினர்கள் ஏராளமானோர் பள்ளி விடுதிக்கு வந்தனர். அவர்கள் மாணவியின் தற்கொலை முடிவுக்கான காரணம் குறித்து பள்ளி நிர்வாகிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அசம்பாவிதத்தை தடுக்க பள்ளி விடுதி முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் வெளியில் இருந்து வந்த யாரையும் விடுதிக்குள் செல்ல அனுமதிக்கவில்லை. இதேபோல் விடுதியில் இருந்த மாணவிகளையும் வெளியே செல்லவிடாமல் தடுத்தனர். இதனால் அப்பகுதியில் பதட்டமான நிலை ஏற்பட்டு உள்ளது. தற்கொலை செய்த மாணவி சரளா, விவசாயி பூசனம்-முருகம்மாள் தம்பதியின் ஒரே மகள் ஆவார். மகளின் உடலை பார்த்த அவர்கள் அலறி துடித்தது அனைவரையும் கண் கலங்க வைத்தது. மகளின் சாவில் உள்ள மர்மத்தை வெளியில் கொண்டு வர வேண்டும். அவளை தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இதற்கிடையே மாணவி தற்கொலை குறித்து காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி. சத்யபிரியா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகேர்லா செபாஸ் கல்யாண், திருவள்ளூர் வட்டாட்சியர் செந்தில்குமார், சப்-கலெக்டர் மகாபாரதி, குழந்தைகள் நல அலுவலர் மற்றும் அதிகாரிகள் மாணவி தற்கொலை செய்த இடத்தை ஆய்வு செய்தனர். அவர்கள் விடுதி காப்பாளர்கள் மற்றும் பள்ளி நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தினர். இதே போல் கல்வித்துறை அதிகாரிகளும் பள்ளியில் தனியாக விசாரணை நடத்தி வருகிறார்கள். சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி செல்வக்குமாரும் விசாரணை நடத்தி வருகிறார். மாணவி சரளாவின் சொந்த ஊரான தக்களூர் கிராமத்திலும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள். மாணவி தற்கொலை செய்ததையடுத்து பள்ளிக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. மாணவி தற்கொலை தொடர்பாக மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான்வர்கீஸ் கூறும்போது, "மாணவி சரளா தற்கொலை தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார். இதற்கிடையே பள்ளி விடுதியில் தங்கி உள்ள மற்ற மாணவிகளின் பெற்றோர் மற்றும் அவர்களது உறவினர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டு வந்தனர். அவர்கள் தங்களது மகள்களின் நிலை குறித்து அறிந்து கொள்ள வேண்டும் என்று கூறி விடுதிக்குள் செல்ல முயன்றனர். ஆனால் அவர்களை விடுதிக்குள் செல்ல போலீசார் அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும், மாணவிகளின் பெற்றோர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அசம்பாவிதத்தை தடுக்க கூடுதல் போலீசார் அங்கு வரவழைக்கப்பட்டு உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Related News