கச்சத்தீவு அருகே மீன்பிடித்த ராமேசுவரம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் 6 பேர் கைது

கச்சத்தீவு அருகே மீன்பிடித்த ராமேசுவரம் பகுதியை சேர்ந்த  மீனவர்கள் 6 பேர் கைது

இந்த நிலையில் ராமேசுவரம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் நேற்று காலை 400 விசைப்படகுகளில் 2 ஆயிரம்பேர் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.  தமிழக மீனவர்கள் இலங்கை பகுதிக்கு சென்று மீன்பிடித்தால் இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்து வருகின்றனர். மேலும் தமிழக மீனவர்களின் மீன்பிடி உபகரணங்களை சேதப்படுத்தி மீன்களை பறித்து செல்லும் சம்பவங்களும் அடிக்கடி நடந்து வருகிறது. இந்த நிலையில் ராமேசுவரம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் நேற்று காலை 400 விசைப்படகுகளில் 2 ஆயிரம்பேர் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். இதில் இரவு 9 மணி அளவில் கச்சத்தீவு பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த 2 விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் திடீரென மடக்கி அதில் இருந்த 11 மீனவர்களை கைது செய்தனர்.

இதில் ஒரு படகில் வந்த 5 மீனவர்கள் தங்களது படகு பழுதாகி விட்டதால் இந்த பகுதிக்கு வந்துவிட்டதாக தெரிவித்தனர். அதனை சோதனை செய்த இலங்கை கடற்படையினர் அவர்கள் கூறியது உண்மை தான் என்று தெரிந்ததும் அவர்களை விடுத்துவிட்டனர். அப்போது கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்க யாரும் வரக்கூடாது என்று எச்சரித்தனர். மீறி வந்தால் கைது செய்வோம் என்று கூறினர். இன்னொரு படகில் இருந்த 6 மீனவர்களை மட்டும் கைது செய்து இலங்கை தலைமன்னாரில் உள்ள மீன்வளத்துறை அலுவலகத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர்கள் மீனவர்கள் சென்ற விசைப்படகையும் பறிமுதல் செய்துள்ளனர். கைதான 6 மீனவர்களும் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என தெரிகிறது. கைதான 6 மீனவர்களும் ராமேசுவரம், தங்கச்சிமடம் பகுதிகளை சேர்ந்தவர்கள். அவர்கள் தூதர் என்பவருக்கு சொந்தமான படகில் மீன்பிடிக்க சென்றுள்ளனர். அந்த படகில் சென்ற பாலமுருகன், அந்தோணி, தங்கபாண்டி, அஜித், கிருஷ்ணன், பிச்சை ஆகிய 6 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். அவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களையும் பறிமுதல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.