கிளாம்பாக்கம் மெட்ரோ ரெயில் பாதைத்திட்ட பணி விரைவில் தொடங்குகிறது

மெட்ரோ ரெயில் 2-வது கட்ட பாதை ரூ.61 ஆயிரத்து 843 கோடி செலவில், மூன்று வழித்தடங்களில் 118.9 கி.மீட்டடர் தூரத்துக்கு அமைக்கப்பட இருக்கிறது. சென்னையின் போக்கு வரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. தற்போது, விமான நிலையம் முதல் விம்கோ நகர் வரையிலும், பரங்கிமலை முதல் சென்ட்ரல் வரையிலும் இரு வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் இயக்கப்பட்டு வருகின்றன. மெட்ரோ ரெயில் 2-வது கட்ட பாதை ரூ.61 ஆயிரத்து 843 கோடி செலவில், மூன்று வழித்தடங்களில் 118.9 கி.மீட்டடர் தூரத்துக்கு அமைக்கப்பட இருக்கிறது.

இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் முடிந்து, பல இடங்களில் கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இதற்கிடையே சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை 15.3 கி.மீட்டர் தூரத்திற்கு ரெயில் பாதை அமைக்க ஏற்கனவே திட்டமிடப்பட்டது. இதில் பல்லாவரம், கோதண்டம் நகர், குரோம்பேட்டை, மகாலட்சுமி காலனி, திரு.வி.க. நகர், தாம்பரம், இரும்புலியூர், பீர்க்கன் கரணை, பெருங்களத்தூர், வண்டலூர், அறிஞர் அண்ணா பூங்கா மற்றும் கிளாம்பாக்கம் ஆகிய 12 நிலையங்கள் அமைய உள்ளன.

 ஏற்கனவே கோயம்பேடு பஸ்நிலையத்தை தொடர்ந்து கிளாம்பாக்கத்தில் 2-வது புறநகர் பஸ்நிலைய கட்டுமான பணிகள் முடிந்து விரைவில் திறக்கப்பட இருக்கிறது. இங்கிருந்து தென் மாவட்ட பஸ்கள் இயக்கப்பட உள்ளன. எனவே கிளாம்பாக்கம் மெட்ரோ ரெயில்பாதை மிகவும் எதிர்பாப்பை ஏற்படுத்தி உள்ளது. நெடுஞ்சாலைத்துறை ஏற்கனவே தாம்பரம் வரை உயர்மட்ட பாலம் அமைக்க திட்டமிட்டு உள்ளது. அதே வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் பாதையும் செல்ல இருக்கிறது. இதனால் எந்த உயரத்தில் மெட்ரோ ரெயிலின் வழித்தடம் கட்டப்பட வேண்டும். மேம்பால உயரம் குறித்து நெடுஞ்சாலைத்துறை மற்றும் மெட்ரோ ரெயில் நிர்வாகத்தினர் இடையே நீண்ட கால பேச்சுவார்த்தை நடந்து வந்தது.

இதைத்தொடர்ந்து மெட்ரோ ரெயில் நிர்வாகம் இந்த ஆண்டு தொடக்கத்தில் விமான நிலையம் -கிளாம்பாக்கம் மெட்ரோ ரெயில் பாதை தொடர்பாக விரிவான திட்ட அறிக்கையை மாநில அரசிடம் சமர்பித்து இருந்தது. இந்த நிலையில் நெடுஞ்சாலைத்துறை மெட்ரோ ரெயில் நிர்வாகத்தின் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பாடு முடிவுக்கு வந்து உள்ளது. இதனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விமான நிலையம்-கிளாம்பாக்கம் மெட்ரோ ரெயில் பாதை அமைக்கும் பணி விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து மெட்ரோ ரெயில் நிர்வாக அதிகாரி ஒருவர் கூறும்போது, விமான நிலையம்- கிளாம்பாக்கம் இடையே மெட்ரோ ரெயில் பாதை தொடர்பாக நெடுஞ்சாலைத்துறையுடன் ஒருமித்த கருத்து ஏற்பட்டு உள்ளது. மெட்ரோ ரெயில் பாதையின் உயரம் குறித்து சில இடங்களில் மட்டும் சில மாற்றங்கள் செய்யப்படும். வரும் வாரங்களில் விரிவான திட்ட அறிக்கையில் மாற்றங்கள் செய்யப்படும். அடுத்த ஆண்டு மத்தியில் பணிகளைத் தொடங்க திட்டமிட்டு இருந்தாலும், மாநில அரசு மற்றும் மத்திய அரசின் ஒப்புதல்கள் வழங்கப்பட்டு, விரைவில் நிதிஉதவிக்கான முயற்சிகள் எடுக்கப்படாவிட்டால் இந்தத் திட்டம் தாமதமாகும் என்றார்.