இரண்டு ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த இருதய அறுவை சிகிச்சை நாளை முதல் தொடங்கப்படும் என முதலம

 

 

புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், சென்னை ப்ராண்டியர் லைஃப் லைன் மருத்துவமனை உதவியுடன் இணைந்து இருதய அறுவை சிகிச்சை தொடங்கி வைக்கப்பட்டது. 
இதன்படி, மொத்தம் 234 இருதய அறுவை சிகிச்சைகள் இதுவரை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளன.ஆனால், கரோனா தொற்றுப் பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக இருதய அறுவை சிகிச்சைகள் முன்னதாக நிறுத்தி வைக்கப்பட்டன. இந்நிலையில், தற்போது புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் மீண்டும் இருதய அறுவை சிகிச்சைகள் தொடங்கப்பட்டுள்ளன. 
இதற்காக இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் ப்ராண்டியர் லைஃப் மருத்துவமனைகள் ஒப்பந்தம் மீண்டும் முதலமைச்சர் ரங்கசாமி முன்னிலையில் இன்று (ஜூலை.16) மாலை கையெழுத்தானது.

ப்ராண்டியர் லைஃப்லைன் மருத்துவமனை நிறுவனர் டாக்டர் செரியன், புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் அருண் இருவரும் இது குறித்த ஒப்பந்தங்களை பரிமாறிக் கொண்டனர். இது குறித்து முதலமைச்சர் ரங்கசாமி கூறுகையில், ”கரோனா தொற்று காரணமாக நிறுத்தப்பட்ட இருதய அறுவை சிகிச்சைகள் தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. ஒரு வாரத்திற்கு மூன்று பேர் வீதம் அறுவை சிகிச்சைகள் நடைபெற உள்ளன. இதுவரை 234 பேருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்த வகையில், அனைத்து சிகிச்சைகளும் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளன.புதுச்சேரியில் உள்ள மருத்துவர்களும், சென்னையிலுள்ள மருத்துவர்களும் காணொலி மூலம் பேசி, நோயாளிகளுக்கு எந்த முறையில் அறுவை சிகிச்சை செய்வது என்பது குறித்து ஆலோசனை செய்யப்படும். இதன் மூலம் ஏழை, எளிய மக்கள் சென்னை செல்லாமலே புதுச்சேரியில் தரமான இருதய சிகிச்சையைப் பெற முடியும். சுகாதாரத்துறை மூலம் புதுச்சேரியில் மக்களுக்கு தரமான சுகாதாரமான சிகிச்சையை அரசு அளித்து வருகிறது. இதனை ஏழை எளிய மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார்.

Related News