7.50 கோடி பரிசு வென்ற சுர்ஜித் ராஜேந்திரன் அமெரிக்க வாழ் தமிழ்நாட்டு விஞ்ஞானி!

 


சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளவர் ராஜேந்திரன் பரமேஸ்வரன். இவரது மகன் சுர்ஜித் ராஜேந்திரன். கடந்த 2004ஆம் ஆண்டு கலிபோர்னியா பல்கலைகழகத்தில் கணிதத்துறையில் பட்டமும், இயற்பியல் துறையில் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.தொடர்ந்து, கலிபோர்னிய பல்கலைகழகத்தில் மருத்துவத் துறையில் பயின்று பின்னர் அதே பல்கலைகழகத்தில் இணை பேராசிரியராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், புகழ்பெற்ற சைமன் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, அயர்லாந்து நாடுகளில் உள்ள கல்வி நிறுவனங்களில் ஆய்வில் ஈடுபடும் விஞ்ஞானிகளைத் தேர்வு செய்து வழங்கும் பரிசுத் தொகையை, இந்த ஆண்டு சுர்ஜித் பரமேஸ்வரன் வென்றுள்ளார்.கணிதம், இயற்பியல், வான் இயற்பியல், கணித அறிவியல் ஆகிய துறையில் புதிய ஆய்வுகளை மேற்கொள்ளும் விஞ்ஞானிகளைக் கண்டறிந்து புதிய முறையில் ஆய்வுகளை மேற்கொள்வது, ஆளுமைத் திறனை அதிகரித்தல் ஆகியவைகளை மற்ற ஆய்வு மாணவர்களுக்கும் கிடைக்க ஏற்பாடு செய்வது உள்ளிட்டவற்றை இந்த சைமன் நிறுவனம் செய்து வருகிறது.சைமன் நிறுவனத்தால் தேர்வு செய்யப்படும் விஞ்ஞானிகள் ஐந்து ஆண்டுகள் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். சிறந்து விளங்குபவர்களுக்கு மேலும் ஐந்து ஆண்டுகள் பணி நீட்டிப்பும் வழங்கப்படுகிறது. விஞ்ஞானிகளுக்கு ஆண்டுக்கு இந்திய ரூபாய் மதிப்பில் 75 லட்சம் ரூபாயும், கூடுதலாக சம்மந்தப்பட்ட விஞ்ஞானிகள் குழுவுக்கு ஏழு லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும் இந்நிறுவனத்தால் வழங்கப்பட்டு வருகிறது.இந்தக் குழுவில் விஞ்ஞானியாக சேர்ந்து பல புதிய விஞ்ஞானிகளை உருவாக்கும் அரிய வாய்ப்புகளை உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்களும் தங்களுக்கான மிகப்பெரிய அங்கீகாரமாகவே கருதுகின்றனர்.இந்நிலையில், இந்தக் குழுவில், தமிழ்நாட்டைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜேந்திரன் பரமேஸ்வரனின் மகன்
சுர்ஜித் ராஜேந்திரன், சைமன் நிறுவனத்தால் தேர்வு செய்யப்பட்டார். சுர்ஜித் ராஜேந்திரன், இயற்பியல் துறையில் சிறந்து ஆய்வுகளை மேற்கொண்டதற்காக அவருக்கு ஏழு கோடியே 50 லட்சம் ரூபாயை பரிசாக சைமன் நிறுவனம் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.