அவதூறு: பார்வர்ட் பிளாக் கட்சித் தலைவர் மீதான வழக்கை ரத்துசெய்ய மறுப்பு

 

 

மதுரை: தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் தலைவர் திருமாறன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல்செய்திருந்தார்.அதில், தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், அவரது குடும்பத்தினரை அவதூறாகப் பேசியதாக பாலகிருஷ்ணன் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் மதுரை எஸ்.எஸ். காலனி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து என்னை கைதுசெய்தனர்.

இந்த வழக்கில் மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது. மேலும் இந்த வழக்கை ரத்துசெய்ய வேண்டும்" எனக் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி இளங்கோவன் முன் விசாரணைக்கு வந்தது.அப்போது அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்கறிஞர் அன்பு நிதி, "மனுதாரர் தமிழ்நாட்டின் நிதித் துறை அமைச்சர் குறித்து அவதூறாக சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த விவகாரம் சட்ட உள்ளடங்கைப் பாதிக்கக்கூடிய வகையில் இருந்ததால் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மதுரை மாவட்ட குற்றவியல் நீதிமன்ற உத்தரவின்படி வழக்குப் பதியப்பட்டுள்ளது. மேலும் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. எனவே வழக்கை ரத்துசெய்ய வேண்டிய அவசியம் இல்லை" என வாதிட்டார். இதனைப் பதிவுசெய்த நீதிபதி வழக்கை ரத்துசெய்ய மறுத்து வழக்கின் புகார்தாரர், மனுதாரர் தரப்பில் வழக்கின் முழு விவரங்களைத் தாக்கல்செய்ய உத்தரவிட்டு இறுதி விசாரணையை ஜூலை 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Related News