ஊட்டி அருகே கள்ளக்காதலியை கொன்று நாடகமாடிய சப்-இன்ஸ்பெக்டரை போலீசார் கைது செய்து ஜெயிலில் அட

 

 


நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகே உள்ள காந்தல் புதுநகரை சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி மாகி(53). இவர்களுக்கு ஷீலா என்ற மகள் உள்ளார். மாகி ஊட்டி மத்திய பஸ்நிலையம் அருகே தள்ளுவண்டியில் உணவு வியாபாரம் செய்து வந்தார். கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த மாகி 3 நாட்களுக்கு முன்பு குணமாகி வீடு திரும்பினார். நேற்று முன்தினம் மதியம் மாகி பொருட்கள் வாங்க செல்வதாக கூறிவிட்டு மொபட்டில் ஊட்டிக்கு சென்றவர் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இந்த நிலையில் நேற்று காலை ஊட்டியில் கியூ பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்க்கும் முஸ்தபா என்பவர் மாகியின் வீட்டிற்கு வந்தார். அவர், அங்கிருந்த மாகியின் மகள் ஷீலாவிடம், உனது தாய் நெஞ்சு வலி ஏற்பட்டு இறந்ததாகவும், ஆஸ்பத்திரியில் இருந்து உடலை தான் எடுத்து வந்ததாகவும் கூறி உடலை ஒப்படைத்து விட்டு புறப்பட்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் அவரது உறவினர்கள் அங்கு குவிந்தனர். அவர்கள் மாகியின் உடலை பார்த்தபோது, முகம், கண் ஆகிய பகுதிகளில் காயங்கள் இருந்தது.

இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் ஊட்டி நகர மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டனர். மேலும் உடலை ஒப்படைத்து சென்ற சப்-இன்ஸ்பெக்டர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை பிடித்து விசாரித்த போது, அவர் மாகியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். போலீசாரிடம் அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:- எனக்கு 20 வருடங்களுக்கு முன்பு தள்ளுவண்டி கடை நடத்தி வரும் மாகியுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தோம்.

எங்களது விவகாரம் இருவரது வீட்டிற்கு தெரிந்து எங்களை கண்டித்தனர். ஆனாலும் எங்களது கள்ளக்காதல் தொடர்ந்தது. மாகி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால் கடந்த ஒருவாரமாக அவரை சந்திக்க முடியவில்லை. இந்த நிலையில் தொற்று குணமடைந்து மாகி வீட்டிற்கு வந்த தகவலை அறிந்த நான் சம்பவத்தன்று அவருக்கு போன் செய்து ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் உள்ள விடுதிக்கு வருமாறு அழைத்தேன். அவரும் அந்த விடுதிக்கு வந்தார். அங்கு இருவரும் உல்லாசம் அனுபவித்தோம். அப்போது மாகி செலவுக்கு என்னிடம் பணம் கேட்டார். இதனால் எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த நான் அவரை தாக்கினேன். இதனால் அவர் மயங்கி விழுந்து விட்டார். பின்னர் நான் அவரை அங்கேயே விட்டு விட்டு எனது வீட்டிற்கு சென்றேன். மறுநாள் காலை வந்து பார்த்தபோது மாகி உயிரிழந்திருப்பதை அறிந்ததும் அதிர்ச்சியடைந்தேன். இதனால் என்ன செய்வது என்று யோசித்த நான், அவரது உடலை ஒரு வெள்ளை துணியை எடுத்து சுற்றினேன். பின்னர் அதனை எடுத்து கொண்டு அவரது வீட்டிற்கு சென்று, நெஞ்சுவலியால் இறந்து விட்டதாக கூறி கொடுத்து விட்டு, எனது வீட்டிற்கு சென்று எதுவும் தெரியாதது போல் இருந்து கொண்டேன். ஆனால் போலீசாரின் தீவிர விசாரணையில் சிக்கி கொண்டேன்.

இவ்வாறு அவர் கூறினார். இதையடுத்து போலீசார் முஸ்தபாவை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி கூடலூரில் உள்ள சிறையில் அடைத்தனர். 

Related News