மேற்கு தொடர்ச்சி மலையில் சாம்பல் நிற அணில்கள் எண்ணிக்கை உயர்வு

 

 

   
ஸ்ரீவில்லிபுத்தூரில் செண்பகதோப்பு பகுதியில் உள்ள காட்டழகர் கோவில், ராஜபாளையம் அய்யனார் கோவில், வத்திராயிருப்பு பகுதியில் சுந்தரமகாலிங்கம் கோவில் பகுதிகளில் சாம்பல் நிற அணில்கள் ஏராளமாக வசித்து வருகின்றன.

ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலையில் சாம்பல் நிற அணில்கள் எண்ணிக்கை உயர்வு ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி இயற்கை சூழல் கொண்ட பகுதி ஆகும். இந்த இடம் வளமான அரியவகை உயிரினங்களை தன்னகத்தே கொண்டு திகழ்கிறது. இங்கு சாம்பல் நிற அணில் உயிரின உய்விடம் கடந்த 1989-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. சுமார் 480 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த பகுதி மழை தட்ப வெப்ப நிலையில் பலவித மாறுபாடுகளை கொண்டுள்ளதாகும்.

இந்த வனப்பகுதி, யானை, மான், வரையாடு, புலி, சிங்கவால் குரங்கு, கரடி, காட்டெருமை, சாம்பல் நிற அணில்கள் ஆகியவற்றின் வாழ்விடமாக திகழ்கிறது. மலையின் மடிப்புகள், அகன்ற புல்வெளி, அமைதியான ஆறு, சீறிப்பாயும் சிற்றாறு என பல அம்சங்களை கொண்ட இப்பகுதியில் சாம்பல் நிற அணில்கள் ஏராளமாக வசித்து வருகிறது. அழிந்து வரும் வன விலங்குகளின் பட்டியலில் உள்ள சாம்பல் நிற அணில்கள் குட்டி போட்டு பால் கொடுக்கும் பாலூட்டி இனத்தை சேர்ந்தது. ஆண்டுக்கு ஒரு குட்டி வீதம் ஈனும் இதன் கர்ப்பகாலம் 35 முதல் 40 நாட்கள் வரை ஆகும். இதன் ஆயுட்காலம் 15 ஆண்டுகள் ஆகும். இது முதுகில் சாம்பல் நிறமும், மூக்குப் பகுதியில் சிவப்பு நிறமும், வால் நீண்டு வயிறு பெருத்து காணப்படும்.

தற்போது மலையில் உள்ள இயல்பான சீதோஷ்ணம் மற்றும் பல்வேறு காரணங்களால் இதன் எண்ணிக்கை பெருகியுள்ளது. இந்த வகை அணில்கள் காலை மற்றும் மாலை வேளைகளில் மட்டும் உணவு தேடி வெளியே வரும். சாம்பல் நிற அணில்கள் ஆற்றோரம் உள்ள மரங்களில் கூடுகட்டி வசிக்கும். மாம்பழம் புளியம் பழம் மற்றும் இளம் தளிர்களை உணவாக உட்கொண்டு வாழும்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் செண்பகதோப்பு பகுதியில் உள்ள காட்டழகர் கோவில், ராஜபாளையம் அய்யனார் கோவில், வத்திராயிருப்பு பகுதியில் சுந்தரமகாலிங்கம் கோவில் பகுதிகளில் இந்த சாம்பல் நிற அணில்கள் ஏராளமாக வசித்து வருகின்றன. 1972-ம் ஆண்டின் வன விலங்குகள் வேட்டை தடுப்பு சட்டப்படி இவற்றை பிடித்தாலும், வேட்டையாடினாலும் கடும் தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள். இந்த வகை அணில்கள் சுற்றுலா பயணிகளை பெரிதும் கவர்ந்துள்ளது. சுற்றுலா பயணிகள் மற்றும் வன உயிரின ஆராய்ச்சியாளர்கள் இந்த வகை அணில்களை வியப்புடன் பார்த்து செல்கின்றனர்.