பெனால்டி ஷூட் அவுட் முறையில் 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று அர்ஜென்டினா அணி இறுதிப் போட்டி

 

 

தென் அமெரிக்க கண்டத்தின் முன்னணி அணிகள் பங்கேற்கும் கோபா அமெரிக்கா கால்பந்து தொடர், இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. பிரேசில் நாட்டின் பிரசில்லா மைதானத்தில் முன்னதாக நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா - கொலம்பியா அணிகள் மோதின.


1993ஆம் ஆண்டுக்குப் பின் முன்னணி தொடர் எதையும் அர்ஜென்டினா அணி கைப்பற்றியதில்லை. குறிப்பாக, நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸி இதுவரை அர்ஜென்டினா அணிக்காக கோப்பையை வென்றதில்லை என்ற தீராக் குறையும் உள்ளது.இறுதிப் போட்டிக்குள் நுழைந்து கோப்பையை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என்ற உத்வேகத்தில் அர்ஜென்டினா ஆட்டத்தை தொடங்கியது. 

அதற்கான பலன் ஆரம்பத்திலேயே கிடைத்தது. ஆட்டத்தின் 7ஆவது நிமிடத்தில் மெஸ்ஸி கொடுத்த அபார பாஸ்சை முன்களத்தில் இருந்த லுடாரோ மார்டினேஸ் கோலாக மாற்றினார். இதையடுத்து 1-0 என்ற கணக்கில் அர்ஜென்டினா முன்னிலை பெற்றது.அதேவேளை கொலம்பியா அணியும் சளைக்காமல் அர்ஜென்டினா அணிக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆட்டத்தின் 61ஆவது நிமிடத்தில் கொலம்பிய வீரர் லூயிஸ் டியாஸ் அணிக்கு கோல் அடிக்க ஆட்டம் 1-1 என்று சமநிலைக்கு வந்தது.
ஆட்டத்தின் ரெகுலர் டைம் முடியும் வரை இரு அணிகளாலும் மேலும் கோல் அடிக்க முடியாததால் ஆட்டத்தின் முடிவு பெனால்டி ஷூட் அவுட் மூலம் தீர்மானிக்கப்பட்டது.அர்ஜென்டினா கோல் கீப்பர் அபாரம்பெனால்டி ஷூட் அவுட்டில் இரு அணிகளுக்கும் முதலில் தலா ஐந்து ஷாட்கள் கொடுக்கப்பட்டன. கொலம்பியா அணிக்கு முதல் ஷாட்டை அடிக்கும் வாய்ப்பு கிடைத்து. 

அந்த அணியின் குராடோ அதை கோலாக மாற்றினார். கொலம்பியா 1-0 என்று முன்னிலை பெற்ற நிலையில், மெஸ்ஸி பெனால்டி ஷாட்டை கோலாக மாற்ற 1-1 என்று சமனுக்கு வந்தது.அதன் பின்னர் அர்ஜென்டினா கோல் கீப்பர் எமிலாயானோ மார்டினேஸ் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கொலம்பியா அணிக்கு 4 ஷாட்கள் மீதமிருந்த நிலையில், அதில் மூன்றை அர்ஜென்டினா வீரர் மார்டினேஸ் லாவகமாக தடுத்து நிறுத்தினார். இதையடுத்து, ஐந்தில் இரு கோல்களை மட்டுமே கொலம்பியாவால் அடிக்க முடிந்தது.
அர்ஜென்டினா அணி முதல் 4 வாய்ப்புகளில் மூன்றை கோலாக மாற்ற 3-2 என வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. வரும் சனிக்கிழமை (ஜூலை 10) நடைபெறும் இறுதிப் போட்டியில் பிரேசில் அணியை அர்ஜென்டினா எதிர்கொள்கிறது.